அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, September 02, 2007

அசுரனிடம் கேளுங்கள்!

1. இந்த உலகிலேயே மிக அன்பானவர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?- சதீஷ், நாகர்கோவில்இப்போதைய நிலைவில் அதற்கென ஒரு போட்டி வைத்தால் அதில் வெற்றி பெறுபவர் நிச்சயமாக சிறீலங்கா அதிபர் இராஜபக்ஷேவாகத்தான் இருப்பார். திகைக்காதீர்கள்! சிறீலங்காவில் தெருவில் திரியும் நாய்களைக் கொல்லக்கூடாது என்று ஆணையிட்டுள்ளார். என்ன அன்பு பார்த்தீர்களா? (என்ன, நாயினுங் கேடான தமிழர் நிலையை மட்டும் மறந்துவிடுங்கள்).
2. ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க ஒரு தொழிற்சாலை அமைப்பது தவறா?- ஆசாத், குளச்சல்.தாத்தாவும் பாட்டாவும் ஒப்பந்தம் போட்ட டைட்டானியம் ஆலை பற்றித்தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். 'பிக்பாக்கட்' திருடனை சமாளிக்க சம்பல் கொள்ளையனை அழைத்து வருவது எப்படி சரி? ஆயிரம் பேருக்கு வேலை சரி: 20,000 பேருக்கு வாழ்வு பறிபோகிறதே?
3. டாக்டர்கள் கூட பயங்கரவாதிகளாக ஆகிவிட்டார்களே?- ராம், நெல்லை.நீங்களும் அந்த மாயையில்தான் இருக்கிறீர்களா?'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். இப்போது, அது அமெரிக்காவுக்கும் மிகப்பொருந்தும். முன்பெல்லாம் யாரையாவது கைது செய்யவேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் என்பார்கள். இப்போது யாரேனும் ஒருவர் இசுலாமியராகவோ, கறுப்பு அல்லது பழுப்பராகவோ இருந்தாலே போதும் என்றாகிவிட்டது.மருத்துவர் கையில் ஊசியை எடுக்கவேண்டுமா அல்லது துப்பாக்கியை தூக்கவேண்டுமா என்பதை சமூகச் சூழல்தான் தீர்மானிக்கிறது.'தன்வினை தன்னைச் சுடும்' என்பதை அமெரிக்கா மறக்கக்கூடாது.
4. என்னங்க 'சிவாஜி' ய பற்றி நீங்க எதுவுமே எழுதலியே?- ஆல்பர்ட், கோவை.அதைப்பற்றியும் எழுத வேண்டியதாகிவிட்டதா? நான் தப்பிவிட்டதாக அல்லவா நினைத்தேன். கறுப்புப்பணத்தை தேடி சிவாஜி தொடர்புடையவர்களின் வீடுகளில் ரசிக மகா ஜனங்கள் புகுந்துவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம்கூட முன்யோசனை இல்லாமல் எப்படி இப்படியொரு படத்தை எடுத்தார்களோ?
5. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னும் பொதுப்பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போர் குறைந்து வருகிறார்களே?- சங்கர், விழுப்புரம்.ஆகஸ்ட் 15 - க்கு மிட்டாய் வேணும்ணா நேரடியா கேளுங்க. அத உட்டுப்புட்டு...?!ஆமா, மக்களுக்காக கொடுக்கப்படும் குரல்களுக்கும் மக்கள் குரல்களுக்கும் இங்கு என்ன மதிப்பு இருக்கிறது?சென்னையில் மருத்துவமனை கட்ட கோரி சுவரெழுத்து பிரச்சாரம் செய்த மக்கள் எழுச்சி இயக்கத்தோழர் நேயனுக்கு கிடைத்தது கைதும் 2 நாள் சிறைவாசமும்.ஆண்டிப்பட்டிக்கு அருகே போதிய ஆசிரியர்கள் வேண்டும் என்று போராடிய பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது போலீசின் தடியடி. 10 மாணவர்கள் தேனி மருத்துவமனையில் அனுமதி. கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராகவும் சேதுசமுத்திரம் திட்டத்திற்கு எதிராகவும் பல்லாயிரம் பேர் திரண்டும் பலனில்லை. நீங்கள் கேட்பது என்னடாவென்றால்...

போலியோ ஒழிப்பு: தோல்வி காத்திருக்கிறது!

குழந்தை என்று யாராவது பெயர் வைத்திருந்தால் கூட வீட்டிற்கே ஆளனுப்பி, தூக்கிச்சென்று, வாயில் போலியோ சொட்டு மருந்தை ஊற்றிவிட்டுத்தான் அனுப்புவார்கள் என்றளவில் தீவிர போலியோ ஒழிப்பு திட்டம் தீவிரமாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அட... போய்யா என்று கூறி, இந்தியாவை காலாற சுற்றி நடந்துபார்க்கத் தொடங்கிவிட்டது போலியோ எனும் இளம்பிள்ளைவாதம்.கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 601 போலியோ நோயாளிகள் ஆதாரபூர்வமாக சிகிட்சைக்கு வந்திருக்கின்றனர். (பரம்பரை மருத்துவர்களிடம் மருத்துவம் பெற்றோர் எண்ணிக்கை இதில் வராது என்பது நிச்சயம்). இந்த ஆண்டு இதுவரை 60 பேர் கண்டறியப்பட்டுள்ளனராம். அதில் பெரும்பாலானவை வடமாநிலங்களே.இதனால், மிரண்டுபோன உலக சுகாதார நிறுவனம் 'இந்தியா செல்வோர் பார்வைக்கு' என்று எச்சரிக்கை குறிப்பை வேறு அனுப்பிவைக்க, பொங்கி எழுந்தது. நமது மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகம். இந்தியாவிலுள்ள 30 கோடி குழந்தைகளுக்கும் போலியோதடுப்பு மருந்து அளிக்கப்போகிறோம் என்று தோள்தட்டி களத்தில் இறங்கிவிட்டார். மத்திய அமைச்சர் மருத்துவர் இரா. அன்புமணி.1300 கோடி ரூபாய் மதிப்பிலான போலியோ ஒழிப்புத்திட்டமானது பிற 9 நோய்தடுப்புத் திட்டங்களுக்கு ஈடான தொகையை விழுங்குகிறது. முன்பு சர்வதேச உதவியாக 90% கிடைத்தது. இப்போதோ நாமேதான் முழுவதும் செலவு செய்தாகவேண்டும்.இந்நிலையில், தி இந்து நாளிதழில் மருத்துவர் ஜேக்கப் எம். புலியல் தெரிவித்துள்ள கட்டுரைகள் நம் கண்களைத் திறப்பதாக உள்ளன. "தேசிய போலியோ ஒழிப்புத் திட்டமானது திட்டமிட்டபடி வேலை செய்யவில்லை. தொடர்ந்து போலியோ சொட்டுமருந்து அளிப்பது என்ற 'மேஜிக் புல்லட்' திட்டம் தோல்வியடைந்துவிட்டது. போலியோ என்பது நீர், சுகாதாரச் சிக்கல் தொடர்பானது" என்கிறார் அவர்.தற்போது தேசிய அறிவு ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் மருத்துவர் புஷ்பா பார்கவா 1999 டிசம்பரில் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்று."1998 -ல் போலியோ தடுப்பு கருத்தரங்கில் சொட்டு மருந்திற்குப் பதிலாக ஊசி மருந்து பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கூர்கானில் ஒரு தடுப்பூசி ஆலை நிறுவவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 1992-ல் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி அத்திட்டம் கைவிடப்பட்டு சொட்டுமருந்து அளிக்க தீர்மானிக்கப்பட்டது.அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு சொட்டு மருந்தானது இந்தியாவுக்கு பொருந்தாது என்றும் அதனால் நமது பணமும் உழைப்பும் தான் வீணாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலில்லை.இந்திய மருத்துவக் கழக (ஐ.எம்.ஏ) துணைக்குழு அறிக்கையில் தடுப்புமருந்தால் தூண்டப்படும் போலியோவானது கடந்த ஆண்டு மட்டும் 1600 என பதிவாகி உள்ளது. ஆனாலும், தொடர்ந்து சொட்டுமருந்து அளிக்கப்பட்டதால் 27,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போலியோ போன்ற பக்கவாத தாக்கம், போலியோ தடுப்புமருந்தால் உருவாகும் போலியோ பாதிப்பு என்பனவெல்லாம் போலியோ சொட்டுமருந்து திறனற்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.1988ல் 24,000 போலியோ நோயாளிகளே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது 1994ல் 4800 ஆகக் குறைந்தது. 1998ல் உலக சுகாதார நிறுவனம், சுழற் சங்கம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் உதவியால், தொடக்கத்தில் ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் உதவியுடன் தொடர் தீவிர போலியோ சொட்டுமருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2 ஆண்டுகளின் பின்னர் 'உதவியாளர்கள்' விலகிக்கொள்ள இத்திட்டத்தை அரசே மேற்கொள்ள வேண்டியதாயிற்று. செலவு என்ன தெரியுமா? 1000 கோடி. ஆக, வெளி 'உதவி' என்பது அரசின் கண்களைக் கட்டி கடன் வலையில் விழவைப்பதேயாகும். இதனால் அரசு முட்டாளாக்கப்பட்டது. நாம் நமது தவறுகளிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.போலியோ சொட்டுமருந்து தோல்வி அடைந்துவிட்டது. எனவே, அதிக பாதிப்புள்ள பகுதியில் இலவச போலியோ தடுப்பூசி போடுவது என்று இப்போது முடிவெடுக்கப்படுகிறது.இந்த 'இலவச' தடுப்பூசியையும் தொடக்கத்தில் வேண்டுமானால் அவர்கள் இலவசமாக தரலாம். அதன்பின்...? பழைய கதைதான். இந்த இறக்குமதி செய்யப்படும் ஊசி மருந்தானது சொட்டு மருந்தைவிட 25 மடங்கு விலை அதிகம். இதனாலும் 100% போலியோ ஒழிக்கப்பட்டு விடுமா என்றால் முடியாது என்கிறார் அவர்.ஆக, இன்னுமொரு தோல்வி காத்திருக்கிறது. மாசுபட்ட குடிநீர், சுகாதாரமின்மை போன்றவற்றால் பரவும் வைரஸ் நோயான போலியோவை வெற்றிகரமாக கையாளவேண்டுமானால் வழக்கமான தடுப்பு மருந்துகளோடு, மக்களுக்கு தூய குடிநீரும், நல்ல சுகாதாரமான சுற்றுச்சூழலையும் ஏற்படுத்தித் தருவதே நிரந்தரத்தீர்வு என்ற இந்திய மருத்துவகழக துணைக்குழு அறிக்கையை ஏற்றால் பிழைத்தோம்.இல்லையென்றால்...நாடு கடன்சுமையில் தள்ளப்படுவதோடு, கூடுதல் போலியோ நோயாளிகளை உருவாக்கிய பெருமையும் நம்மைச்சேரும்.

நக்சலைட்டுகளை ஒழிக்க முடியுமா?



மேற்குவங்கத்தின் நக்சல்பாரி என்ற ஊரில் தொடங்கிய உழவர்களின் எழுச்சி என்பதால், அந்த ஊரின் பெயரால், அதைப் பின்பற்றும் இயக்கத்தினர் தமிழில் நக்சல்பாரிகள் என்றும், ஆங்கிலத்தில் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் எண்பதுகள் வரையிலும் இவர்கள் தீ கம்யூனிஸ்ட்டுகள் (தீவிர கம்யூனிஸ்ட் என்பதின் சுருக்கமாம்) என்றே செய்தி களில் குறிப்பிடப்பட்டனர். தீ கம்யூனிஸ்ட்டுகள் அட்டூழியம் என்ற செய்திகளைப் படித்தால் பொதுவாக அதன் பின்னணியில் கந்துவட்டி கொள்ளைகும்பல்கள் அல்லது கொடூரமான நிலபிரபுக்களுக்கெதிரான ஏதாவது ஒரு நடவடிக்கை செய்தியாகியிருக்கும். தொண்ணூறுகளில் ஆந்திராவில் மக்கள் போர்க்குழுவின் நடவடிக்கைகள் பரபரப்பான செய்திகளாக ஆயின. அதன் பின், பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் அதிரடியாக செயல்படத் தொடங்கியது. (இப்போது இந்த இரு அமைப்புகளும் இணைந்து இந்திய பொதுவுடைமை கட்சி - மாவோயிஸ்ட் என்று புதிய பெயரிட்டும் களத்தில் இறங்கியுள்ளனர்). தற்போது சட்டீஸ்கர், ஜார்கண்ட் முதலான பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் 45, 50 என்று போலீசாரை கொன்றுகுவித்து செய்திகளில் இடம்பெறுகின்றனர். பொதுவாக இந்திய ஆளும் வர்க்கமும், போலீசும் இப்பிரச்சி னைகளை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளாகவே பார்க்கின்றனர். "படித்தவர்கள்" கூட இதனை சமூக பொருளா தார பிரச்சினையாகப் பார்க் காமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே பார்க்கின் றனர் என்பது வேதனைக் குரியது. தற்போது தமிழகத்தில் நக்சலைட் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ள உயர் போலீஸ் அதிகாரியான விஜயகுமாரின் பேட்டிகளே இதற்குச்சான்று. தற்போதைய "பரபரப்பான சட்டீஸ்கரின்" நிலைமையை பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்புவரை பலருக்கும் தெரியாத சட்டீஸ்கர் என்ற பெயர் நக்சல்பாரிகளின் போராட்டம் காரணமாக தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளது. அண்மையில் இப்பிரச்சினை குறித்து வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டீஸ்கர் சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ள செய்தியானது அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது. மிகுந்த இயற்கைவளமும், கனிம வளமும் பெற்றுள்ள சட்டீஸ்கரில் தற்போது மேற்கொள்ளப்படும் தொழில்மய நடவடிக்கைகளால் மக்களிடமிருந்து நிலத்தைப் பறிக்கும்போக்கு உருவாகியுள்ளது. இதற்கு எதிரான நக்சல்பாரிகளின் நடவடிக்கைகளும், தன்னால் நக்சல்பாரிகளை சமாளிக்க இயலாத நிலையில் சல்வார் ஜுடும் என்ற அதிகாரப்பூர்வ கூலிப்படையை அரசு பயன்படுத்துவதும் இங்கு ரத்தக்களரியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வன்முறைகளால் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். டந்தேவாடாவில் உள்ள ஏர்ராபோர் நிவாரண முகாமிற்கு அருகில் துப்பாக்கி ஏந்தியபடி நின்றுகொண்டிருக்கும் ரமேசுக்கு அவருடைய வயதுகூட சரியாகத் தெரியவில்லை. 16 இருக்கலாம். அவருக்கு தேர்தலில் வாக்களிக்கவோ, திருமணம் செய்துகொள்ளவோ இந்த வயதில் உரிமை இல்லை. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சட்டீஸ்கரில் நக்சல்பாரிகளை வேட்டையாடுவதற்காக சிறப்புப் போலீஸ் அதிகாரி என்ற தகுதியில் கையில் துப்பாக்கி, ஒருவாரப் பயிற்சியுடன் 1500 ரூபாய் மாத ஊதியத்தில் இவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் கவிஞரான காசி ஆனந்தன் ஆயுதப்போராட்டம் பற்றி எழுதும்போது "தாயை நேசிக்க மீசை தேவையில்லை" என்றார். இது போராளிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். போலீசுக்கு எப்படிப் பொருந்தும்? அரசு ஒருபுறம் இவ்வாறு முயற்சி செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ - வான மகேந்திர கர்மா வேறொரு முயற்சியை செய்தார். அது தான் சல்வார் ஜுடும். நக்சல்பாரிகள் பழங்குடியினருக்காக போராடும் அதேவேளையில் மற்றொரு பழங்குடியான இந்த எம்.எல்.ஏ முதலமைச்சர் இராமன்சிங், பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். இதிலுள்ள பெரும்பாலானோர் ரமேஷைப் போல பதினாறு வயதிற்குட்பட்டவர்களே. பின்னர் போலீஸ் துறையில் நிரந்தர வேலை தரப்படும் என்ற வாக்குறுதியுடன் இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலான சல்வார் ஜுடும் தலைவர்கள், பழங்குடியினர் அல்லாதோர்கள் அல்லது பணக்கார பழங்குடியினரே. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், தனிப்பட்ட பார்வையாளர்களும் சல்வார் ஜுடும் மூலம் அரசால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக "சல்வார் ஜுடும் கூட்டம் நடத்தப்படும்போது மிகுந்த போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது. மக்கள் மிரட்டி அழைத்துவரப்படுகின்றனர். வராதவர்கள் சல்வா ஜுடும் குண்டர்களாலும், போலீசாலும், நாகா துணை இராணுவப்படையாலும் துன்புறுத்தப்படுகின்றனர்" என்கிறது மக்கள் குடியுரிமை கழக அறிக்கை ஒன்று. பெண்களை தாக்குவது பாலியல் வன்முறைகள் செய்வது, வீடுகளை எரிப்பது போன்ற குற்ற நடவடிக்கைகளில் இக்குண்டர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் மாவோயிஸ்ட்டுகளோ தம் எதிரிகளை தீர்த்துக்கட்டுவதாக மட்டுமே தெரியவருகிறது. உண்மையை வெளியிட்டால் நக்சல் ஆதரவாளன் என்று முத்திரைக் குத்தப்படுவதால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் அஞ்சுகின்றனர். கனிமவளம் மிக்க இந்தமண்ணிலிருந்து மக்களையும் கிராமங்களையும் அப்புறப்படுத்திவிட்டு, நிலத்தை பெருமுதலாளிகளுக்கு கையளிப்பதற்காகவே மக்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக தெரிகிறது. ஜுன் 2005ல் மேற்கொள்ளப்பட்ட நக்சல்பாரிகள் எதிர்ப்பு போலீஸ் நடவடிக்கையின்போது 350 உயிர்கள் பலியானதுடன் 700 பழங்குடி கிராமங்கள் காலிசெய்யப்பட்டது இதை உறுதி செய்கிறது. இதனால் பல்லாயிரம் பழங்குடியினர் ஆந்திரா, ஒரிசா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். 1966 - ல் மிசோ தேசிய முன்னணி கொரில்லாக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளால் இவ்வாறு தம் ஊரைவிட்டு துரத்தப்பட்ட மக்களில், இளைஞர்கள் அக்கொரில்லாக் குழுவில் பெருமளவில் இணைந்ததே வரலாறு. மிசோ சமூக கட்டமைப்பு குலைக்கப்பட்டதால், அவர்கள் இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டார்கள். டந்தேவாடா மாவட்டத்திலுள்ள துருள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கிராமசபா கூட்டம் எஸ்ஸார் குழுமத்தின் இரும்பு எஃகு ஆலைக்காக 600 எக்டேர் நிலம் எடுப்பதற்கு நடத்தப்பட்டது. மக்கள் எதிர்ப்பால் முதல்கூட்டம் தோல்வியில் முடிய, மற்றொரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சிலரின் விரல் ரேகைகள் மிரட்டிப் பெறப்பட்டன. இது எங்கோ ஓரிடத்தில் நடந்தது அல்ல. சட்டீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்திலுள்ள லோகண்டிக்குடா வட்டத்தில் டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைப்பதற்காக முப்போகமும் விளையக்கூடிய, வளமான 2169 ஹெக்டேர் வேளாண் நிலத்தை பிடுங்கி 10 , கிராமங்களை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட கிராமசபா கூட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் மூலம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டது. இவ்வாறு நிலத்திலிருந்து பழங்குடி மக்களை அந்நியப்படுத்துவது என்பது இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் மீது ஏவப்படும் மிகக்கொடிய அடக்குமுறையாகும். சட்டீஸ்கரில் நக்சல்பாரிகள் ஏன் வலுவாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே போதுமான பதிலாகும். அணைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றிற்காக பலநூறாண்டுகளாக தாம் வாழ்ந்து வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு இழப்பீடோ, வேலைவாய்ப்போ வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களின் பண்பாடும், பாரம்பரியமும் அழிக்கப்படுகிறது. மக்கள்நலனை கருதாமல் முன்னெடுக்கப்படும் இந்த வகையான பொருளாதார நடவடிக்கைகள், சமூக கொடுமைகள் நீடிக்கும் வரை நக்சலைட்டுகளை ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களுக்கான அரசாக மாறுவது ஒன்றே இதற்குத் தீர்வு.