அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, September 02, 2007

போலியோ ஒழிப்பு: தோல்வி காத்திருக்கிறது!

குழந்தை என்று யாராவது பெயர் வைத்திருந்தால் கூட வீட்டிற்கே ஆளனுப்பி, தூக்கிச்சென்று, வாயில் போலியோ சொட்டு மருந்தை ஊற்றிவிட்டுத்தான் அனுப்புவார்கள் என்றளவில் தீவிர போலியோ ஒழிப்பு திட்டம் தீவிரமாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அட... போய்யா என்று கூறி, இந்தியாவை காலாற சுற்றி நடந்துபார்க்கத் தொடங்கிவிட்டது போலியோ எனும் இளம்பிள்ளைவாதம்.கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 601 போலியோ நோயாளிகள் ஆதாரபூர்வமாக சிகிட்சைக்கு வந்திருக்கின்றனர். (பரம்பரை மருத்துவர்களிடம் மருத்துவம் பெற்றோர் எண்ணிக்கை இதில் வராது என்பது நிச்சயம்). இந்த ஆண்டு இதுவரை 60 பேர் கண்டறியப்பட்டுள்ளனராம். அதில் பெரும்பாலானவை வடமாநிலங்களே.இதனால், மிரண்டுபோன உலக சுகாதார நிறுவனம் 'இந்தியா செல்வோர் பார்வைக்கு' என்று எச்சரிக்கை குறிப்பை வேறு அனுப்பிவைக்க, பொங்கி எழுந்தது. நமது மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகம். இந்தியாவிலுள்ள 30 கோடி குழந்தைகளுக்கும் போலியோதடுப்பு மருந்து அளிக்கப்போகிறோம் என்று தோள்தட்டி களத்தில் இறங்கிவிட்டார். மத்திய அமைச்சர் மருத்துவர் இரா. அன்புமணி.1300 கோடி ரூபாய் மதிப்பிலான போலியோ ஒழிப்புத்திட்டமானது பிற 9 நோய்தடுப்புத் திட்டங்களுக்கு ஈடான தொகையை விழுங்குகிறது. முன்பு சர்வதேச உதவியாக 90% கிடைத்தது. இப்போதோ நாமேதான் முழுவதும் செலவு செய்தாகவேண்டும்.இந்நிலையில், தி இந்து நாளிதழில் மருத்துவர் ஜேக்கப் எம். புலியல் தெரிவித்துள்ள கட்டுரைகள் நம் கண்களைத் திறப்பதாக உள்ளன. "தேசிய போலியோ ஒழிப்புத் திட்டமானது திட்டமிட்டபடி வேலை செய்யவில்லை. தொடர்ந்து போலியோ சொட்டுமருந்து அளிப்பது என்ற 'மேஜிக் புல்லட்' திட்டம் தோல்வியடைந்துவிட்டது. போலியோ என்பது நீர், சுகாதாரச் சிக்கல் தொடர்பானது" என்கிறார் அவர்.தற்போது தேசிய அறிவு ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் மருத்துவர் புஷ்பா பார்கவா 1999 டிசம்பரில் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்று."1998 -ல் போலியோ தடுப்பு கருத்தரங்கில் சொட்டு மருந்திற்குப் பதிலாக ஊசி மருந்து பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கூர்கானில் ஒரு தடுப்பூசி ஆலை நிறுவவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 1992-ல் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி அத்திட்டம் கைவிடப்பட்டு சொட்டுமருந்து அளிக்க தீர்மானிக்கப்பட்டது.அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு சொட்டு மருந்தானது இந்தியாவுக்கு பொருந்தாது என்றும் அதனால் நமது பணமும் உழைப்பும் தான் வீணாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலில்லை.இந்திய மருத்துவக் கழக (ஐ.எம்.ஏ) துணைக்குழு அறிக்கையில் தடுப்புமருந்தால் தூண்டப்படும் போலியோவானது கடந்த ஆண்டு மட்டும் 1600 என பதிவாகி உள்ளது. ஆனாலும், தொடர்ந்து சொட்டுமருந்து அளிக்கப்பட்டதால் 27,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போலியோ போன்ற பக்கவாத தாக்கம், போலியோ தடுப்புமருந்தால் உருவாகும் போலியோ பாதிப்பு என்பனவெல்லாம் போலியோ சொட்டுமருந்து திறனற்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.1988ல் 24,000 போலியோ நோயாளிகளே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது 1994ல் 4800 ஆகக் குறைந்தது. 1998ல் உலக சுகாதார நிறுவனம், சுழற் சங்கம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் உதவியால், தொடக்கத்தில் ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் உதவியுடன் தொடர் தீவிர போலியோ சொட்டுமருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2 ஆண்டுகளின் பின்னர் 'உதவியாளர்கள்' விலகிக்கொள்ள இத்திட்டத்தை அரசே மேற்கொள்ள வேண்டியதாயிற்று. செலவு என்ன தெரியுமா? 1000 கோடி. ஆக, வெளி 'உதவி' என்பது அரசின் கண்களைக் கட்டி கடன் வலையில் விழவைப்பதேயாகும். இதனால் அரசு முட்டாளாக்கப்பட்டது. நாம் நமது தவறுகளிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.போலியோ சொட்டுமருந்து தோல்வி அடைந்துவிட்டது. எனவே, அதிக பாதிப்புள்ள பகுதியில் இலவச போலியோ தடுப்பூசி போடுவது என்று இப்போது முடிவெடுக்கப்படுகிறது.இந்த 'இலவச' தடுப்பூசியையும் தொடக்கத்தில் வேண்டுமானால் அவர்கள் இலவசமாக தரலாம். அதன்பின்...? பழைய கதைதான். இந்த இறக்குமதி செய்யப்படும் ஊசி மருந்தானது சொட்டு மருந்தைவிட 25 மடங்கு விலை அதிகம். இதனாலும் 100% போலியோ ஒழிக்கப்பட்டு விடுமா என்றால் முடியாது என்கிறார் அவர்.ஆக, இன்னுமொரு தோல்வி காத்திருக்கிறது. மாசுபட்ட குடிநீர், சுகாதாரமின்மை போன்றவற்றால் பரவும் வைரஸ் நோயான போலியோவை வெற்றிகரமாக கையாளவேண்டுமானால் வழக்கமான தடுப்பு மருந்துகளோடு, மக்களுக்கு தூய குடிநீரும், நல்ல சுகாதாரமான சுற்றுச்சூழலையும் ஏற்படுத்தித் தருவதே நிரந்தரத்தீர்வு என்ற இந்திய மருத்துவகழக துணைக்குழு அறிக்கையை ஏற்றால் பிழைத்தோம்.இல்லையென்றால்...நாடு கடன்சுமையில் தள்ளப்படுவதோடு, கூடுதல் போலியோ நோயாளிகளை உருவாக்கிய பெருமையும் நம்மைச்சேரும்.

0 Comments:

Post a Comment

<< Home