அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, July 23, 2006

கோகோகோலா வாளெடுக்கிறது கேரளம்; வாளாவிருக்கிறது தமிழகம்

இப்போதெல்லாம் கோகோகோலா என்றாலே கூடவே பிளாச்சிமடாவும் நினைவுக்கு வருகிறது. கேரளத்தின் சித்தூர் தாலுகாவிலுள்ள இந்தக் கிராமத்தில் அமைந்து செயல்பட்டுவந்த கோகோகோலா நிறுவனம் அப்பகுதியின் நீர்வளத்தை முற்றிலும் சுரண்டியதோடு, தனது கழிவுகளால் அப்பகுதியையே மாசுபடுத்தியும்விட்டது. இதைத்தொடர்ந்து பெருமளவிலான மக்கள் போராட்டத்தைச் சந்தித்ததால் முதன்முதலாக 2002ல் அந்த ஆலை மூடப்பட்டது. "நவீனமயமாக்கம்", "திறந்த சந்தை", "முன்னேற்றம்", "தனியார்மயம்", "தாராளமயம்" என்ற சொற்களோடு இந்திய அரசால் திறந்துவிடப்பட்ட கோகோகோலா நிறுவனம் தண்ணீரை கிட்டத்தட்ட இலவசமாகவே பெறுவதுபோல உறிஞ்சி எடுத்து அதனை கணக்கிடவே முடியாத அளவு இலாபம் வைத்து அந்த மக்களுக்கே விற்கும் அவலம் இங்குதான் நடைபெற்றுவந்தது. தனது இலாப வேட்டையை தொடர அது இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்றது. இந்தப் போராட்டங்களையெல்லாம் எப்படியாவது முடித்துவைத்து மீண்டும் தனது தங்கவேட்டையைத் தொடரலாம் என்று நினைத்திருந்த கோகோகோலாவுக்கு அப்படியான நிரந்தர வெற்றி கிடைப்பதுபோலத் தெரியவில்லை.

அப்பகுதியில் தொடர்ந்து நிலவும் தண்ணீர் பிரச்சினை அப்படி. அதோடு ஏற்கனவே கோகோகோலாவுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துவந்த இடதுசாரி அணியே இப்போது கேரளத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோகோகோலா எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த வேலூர் சுவாமிநாதன், மைலம்மா, விலயோடி வேணுகோபால், மாரியப்பன் மற்றும் பிளாச்சிமடா ஆதரவுக்குழுவைச் சேர்ந்த அஜயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த சூன் 15ஆம் நாள் கேரள முதல்வர் அச்சுதானந்தனைச் சந்தித்து இதுதொடர்பாக உரையாடி, மனு அளித்துள்ளனர். அதில் பிளாச்சிமடா கோகோகோலா ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியுள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்றும் கோகோகோலா நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடும் மக்கள் எதிர்ப்பின்விளைவாக மார்ச் 2004 வரை மூடப்பட்டிருந்த இந்த ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவ்வப்போது சிறியளவில் ஆதரவு இருப்பதுபோல தெரிந்தாலும் பெருமளவில் பயன் ஏதும் இல்லை. அதோடு தொழிற்சாலைக்குள்ளும் அவ்வளாகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் காட்மியம் மற்றும் காரீயம் ஆகியவை மிகுந்த அளவில் காணப்பட்டதால் ஆகஸ்ட் 2005ல் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அத்தொழிற்சாலைக்கு நிறுத்தல் ஆணை வழங்கியது.

அதோடு, கேரள அரசும் பிளாச்சிமடா பகுதியில் இருந்து நீரை எடுப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ஏழைகளின் நீரை உறிஞ்சி பணக்காரர்களுக்கு அருந்தக் கொடுப்பதாக குற்றம் சாட்டியது. இவையெல்லாம் கோகோ கோலாவுக்கு பெரும் பின்னடைவுகளாக அமைந்தன.
அண்மையில் முதலமைச்சரைச் சந்தித்த குழுவினர் பல உறுதிமொழிகளை அரசிடம் பெற்றுள்ளனர். அவற்றில் சில,
  • ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே கோகோ கோலா எதிர்ப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த முதலமைச்சர் அச்சுதானந்தன் இச்சிக்கலைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஊறுதியளித்துள்ளார்.

  • வேளாண்துறை அமைச்சர் முல்லக்கர இரத்தினாகரம் அப்பகுதியிலுள்ள உழவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மற்றம் மாசுபாடு பிரச்சினைகளைக் குறித்து மதிப்பிட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளார்.

  • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பாளருமான பி.கே. சிறீமதி சுகாதார சேவைகள் துறை இயக்குநருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் சுகாதார முகாம்கள் நடத்துமாறும் நிலைமை குறித்து இடைக்கால அறிக்கையொன்றை வழங்குமாறும் கூறியுள்ளார். அதோடு, சட்டத்துறையோடும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தோடும் கலந்துபேசி பொருத்தமான பிரிவுகளில் கோகோ கோலாவுக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடருவது குறித்து முடிவெடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

  • உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள் மீது போடப்பட்ட குற்ற வழக்குகள் யாவும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

  • பிற்படுத்தப்பட்டோர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் தனது மாசால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை பாதித்துள்ள கோகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரப்படுவது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • சட்ட அமைச்சர் எம்.விஜயகுமார் கோகோ கோலா தண்ணீர் எடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கேரள அரசின் சார்பில் வாதாட ஒரு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளார்.

  • நீர்வளத்துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் கோகோ கோலாவுக்கு எதிராக சித்தூர் தாலுகா விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 2005 நவம்பரில் பிளாச்சிமடா பகுதி தேவைக்கு அதிகமாக நீர்வளம் சுரண்டப்பட்டுள்ள கறுப்புப் பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி, அப்பகுதியில் செயல்பட்டுவரும் அனைத்து தொழிற்சாலைகளும் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதற்காக தற்போது மேலும் ஒரு அனுமதியை அரசிடம் பெற்றாகவேண்டும்.

ஆக இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டி இனியும் அங்கே கோகோ கோலா ஆலை செயல்படுவதென்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.
அங்கே பாதிக்கப்பட்ட பிறகு இத்தனை பெரிய போராட்டங்களின் பின்னர் இப்போதுதான் இத்தனை நடவடிக்கைகள்- மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நம் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது...

கடந்த மார்ச் 23 ஆம் நாள் மாவீரன் பகத்சிங் மற்றம் அவனது தோழர்களின் 75ஆம் ஆண்டு நினைவையொட்டி, ஏற்கனவே தாமிரபரணி நீரை கோகோ கோலாவுக்கு கொடுப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட நக்சல்பாரி அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதேநாளில் நாகர்கோவிலில் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் இளம் பெண்களும் நகரின் மையத்திலுள்ள அண்ணா விளையாட்டரங்கத்தின் முன்பு கோகோ கோலாவுக்கு எதிராக இளநீர் விற்கும் போராட்டம் நடத்தினர்.

அவர்களைக் கைதுசெய்த காவல்துறையினர் அவர்கள்மீது பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தை எரிக்க முயன்றதாக வழக்கு போட்டு சிறையில் தள்ளினர். அடப்பாவிகளா இளநீரை வெட்டிக்கொடுக்க கையில் அரிவாள் இல்லாமல் என்ன... மயிலிறகையா வைத்துக்கொண்டிருப்பார்கள்?. இனிமேல் இப்படி கறிக்கடைக்காரர்கள், காய்கறிக்கடைக்காரர்கள் ... ஏன் சவரத்தொழிலாளர்கள்கூட கைது செய்யப்படலாம்... பயங்கர ஆயுதம் வைத்திருந்ததாக.

அய்யப்யோ.... அது புரட்சித் தலைவி ஆட்சி. இப்போதுதான் கலைஞர் ஆட்சி வந்துவிட்டதே இனி அப்படியெல்லாம் ஏதும் நடக்காது என்று நீங்கள் மகிழ்ச்சியடைய காரணங்கள் இல்லை. ஏனென்றால்... அண்மையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தல் பரப்புரையின்போதும் வாக்குப்பொறுக்க வந்த யாருமே, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோகோ கோலாவுக்கு தாமிரபரணித் தண்ணீரை அளிக்கமாட்டோம்" என்று ஒரு பேச்சுக்குச்கூட சொல்லவில்லை என்பது இவ்விசயத்தில் இந்த கட்சிகளுக்கிடையே போபோ போலா விசயத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவேதான் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக யாரும் முன்வைக்கவில்லை.
மக்கள்விரோத கோகோ கோலாவுக்கு எதிராக வாளெடுக்கிறது கேரளம். தாமிரபரணியைக் காப்பாற்ற வாளெடுக்காமல் வாளாவிருப்பதோடு... போராடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது தமிழகம்.

அசுரன்
(நாகர்கோவிலில் இருந்து வெளியாகும் அனலி இதழில் வெளியான கட்டுரை)

மாயமான பசுமைப் போராளி புருனோ மான்சர்





புருனோ மான்சர்- சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் பிறந்தவர். ஒரு சாகசக்காரராக இருந்து சுற்றுச்சூழல் போராளியாக மாறியவர். அவரத சாகசத்திற்கு எடுத்துக்காட்டாக 1996-ல் சுவிட்சர்லாந்தில் பனிபடர்ந்த இரயில்வே இரும்பு கயிற்றில் 3.கி.மீ. தூரம் அவர் சறுக்கிச் சென்றதை சொல்லலாம்.
மலேசியாவுக்கு அருகிலுள்ள போர்னியோவின் தொடப்படாத 45% கன்னிக் காடுகளும், அங்கு வாழும் பழங்குடியினரும் அவரை ஈர்த்தனர். பெருமளவில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மரம் வெட்டும் நடவடிக்கையில் இருந்து அக்காட்டுப்பகுதியைக் காப்பாற்ற அவர் விரும்பினார்.
மலேசியாவில் 20 லட்சம் மக்கள் வாழும் ஒரு மாநிலத்திற்கு மரம் வெட்டலின் மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த (2000) ஆண்டு மட்டும் 4700 கோடி ரூபாய் என்றால் அங்கு நடைபெறும் மரம் வெட்டலின் அளவைப் புரிந்துகொள்ளுங்கள்.
தனது வாழ்க்கை முழுவதும் போர்னியோவில் வாழும் பெனான் பழங்குடி மக்கள் போலவே, அவர்களுடனேயே வாழ விரும்பி 1984-ல் அவர் அப்பழங்குடியினர் பகுதிக்குச் சென்றார்.
இவரை அவர்கள் முதலில் ஏற்கவில்லை. ஒரு நாய்க்குட்டி போல விடாது தொடர்ந்த பின்னரே அவரை தம்முடன் அனுமதித்தனர்.

அவர்களுடன் வாழ்ந்த போது, இருமுறை சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பினார் அவர். ஒருமுறை மலேரியா காய்ச்சல் பிறகு ஒரு முறை நச்சுப் பாம்புக்கடி அவர் கிட்டத்தட்ட அந்த மக்களின் செயலாளர் போல ஆனார். அவர்களின் சார்பில் மரம் வெட்டும் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதினார்.
பெனான் பழங்குடியும் புருனோவின் நண்பருமான அலாங் கூறுகிறார், "மரம்வெட்டலால் காடுகள் அழிந்துவிட்டன. இதனால் வேட்டையாடுதல் முற்றிலும் நின்றுவிட்டது. நாங்கள் இதைவிட்டு வேறு எங்கே செல்வது? இதுதான் எங்களுக்குக் கடைசி இடம்".
ஆம். காட்டையே நம்பியிருந்த 9000 பெனான் இன மக்களும் தம் வாழிடமான காடுகளை விட்டு புல்டோசர்களால் சிதறடிக்கப்பட்டனர். தற்போது 200 பேர் மட்டுமே ஏதுமற்ற நாடோடிகளாக உள்ளனர். சிலர் சிறிய வீடுகளில் வசித்தபடி விவசாயம் செய்கின்றனர். அரசிடம் அடையாள அட்டைக்காக கையேந்தி நிற்கின்றனர்.
கடந்த சனவரி, பிப்ரவரி மாதங்களில் அலாங்கின் இரு மகன்களும் கொல்லப்பட்டு விட்டனர். அவரது இளைய மகனான அயாங்கின் வயது 18, மரம் வெட்டிகள் மீன்பிடிப்பதற்காக ஆற்றில் நஞ்சை கலக்க அந்த ஆற்றுநீரைக் குடித்ததாலேயே இந்த இருவருமே கொல்லப்பட்டனர் என்பது நெஞ்சைப் பிழியும் சோகம்.
"எங்கள் நிலையை கடிதம் மூலம் அரசுக்கும் மரம்வெட்டி நிறுவனங்களுக்கும் புருனோ தெரிவித்து வந்தார். எப்போதுமே அவர் சண்டையிடாதீர்கள் யாரையும் தாக்காதீர்கள் என்றே கூறிவந்தார். இன்று அவரே இல்லை" என்று கதறுகிறார் அலாங்.


புருனோ காட்டில் வாழும் போது பல இடங்களில் பழங்குடி மக்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி மரம் வெட்டிகளைத் தடுக்க முயன்றனர். சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. புருனோ என்ற அயல் நாட்டுக்காரர் தம் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகவும் அவரைக் கைது செய்யுமாறும் அரசு ஆணையிட்டது.
புருனோ இருமுறை காவலர்களால் பிடிக்கப்பட்டு தப்பினார். இரண்டாவது முறை காவல்துறை வாகனம் சென்றுகொண்டிருந்தபோது வாகனத்திலிருந்து ஆற்றில் குதித்து தப்பினார். அப்போது காவலர்கள் ஆற்றில் சுட்டனர் அந்தச் சம்பவத்தின்போது 4 ஆண்டுகாலமாக அவர் குறிப்புகள் எழுதிவைத்திருந்த குறிப்பேடுகளையும் படங்களையும் இழந்தார்.
1990-ல் அரசு தன்னை தீவிரமாகத் தேடுவதை புருனோ உணர்ந்தார் ஒருமுறை பெனான் பழங்குடியினர் அயல்நாட்டு நபர்களை மானிடவியல் சோதனைக்கு அனுமதிக்கக் கூடாது என்றார் மலேசியப் பிரதமர் மகாதிர்முகமது.
சுற்றுச்சூழல் அமைப்பு நண்பர்கள் நிலைமையை உணர்ந்து ஐரோப்பாவில் சென்று பிரச்சாரம் செய்த இப்பகுதிக் காடுகளைக் காப்பாற்றலாம் என்று பேசி அவரை சம்மதிக்க வைத்தனர். தலைமுடியை வெட்டி, போலியான கடவுச்சீட்டுடன் புருனோ சரவாக்கை விட்டு வெளியேறினார். சரவாக் காடழிப்புக்கு எதிராக 1993-ல் அவரது நண்பரும் மருத்துவருமான மார்ட்டினுடன் சேர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் நாடாளுமன்றம் முன் பட்டினிப்போராட்டம் நடத்தினார். 40 நாட்களின் பின்னர் மார்ட்டின் வெளியேறிட 60 நாட்களாக புருனோ தொடர்ந்தார். அவர் சாவின் விளிம்பில் இருக்கையில் தனது தாயாரின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
அரசு அவரது கோரிக்கையை ஏற்று காட்டுமர இறக்குமதிக்குத் தடைவிதிக்கவில்லை. ஆனால் பெனான், புருனோ போன்ற பெயர்களும் செய்தியும் சுவிட்சர்லாந்து, பிரான்சில் பரவியது. இதனால் மரத்தின் பயன்பாடு குறைந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அல்கோர், சரவாக் பிராந்தியத்தில் மரம் வெட்டப்படுவதை எதிர்த்து கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தார். 1990 களில் மரம் வெட்டல் தீவிரமானது எனினும் இறுதிப் பகுதியில் ஆசியப் பொருளாதார நெருக்கடியின்போது குறைந்தது.
கருத்தரங்கம், பிரச்சாரம் என்றிருப்பது புருனோவுக்கு பிடிக்கவில்லை. அவர் புருனோ, இந்தோனேசியா வழியாக சரவாக்கிற்குள் நுழைய முடிவு செய்தார். 1997-ல் ஒரு நண்பருடன் சிங்கப்பூர் வழியாக மலேசியா சென்று கோலாலம்பூரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது கிளைடர் விமானத்தில் பறக்கத் திட்டமிட்டார். இதையறிந்த மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்தது.
1998-ல் புருனே சென்று 300 மீட்டர் அகல லிம்பாஸ் ஆற்றை நண்பர் கிறிஸ்டி நட்டுடன் நள்ளிரவில் நீந்திக் கடந்தார். 3 வாரம் சரவாக்கில் மறைந்திருந்தார். அப்போது 25செ.மீ. நீளமுள்ள இரும்பு லாடங்களை 4 டன் வாங்கி மரங்களின் அடிப்பகுதியில் பதிக்க திட்டமிட்டார். அம்மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டும்போது அவை உடைந்து பெரும் காயங்கள் ஏற்படும். அமெரிக்காவில் மரவெட்டலை எதிர்ப்போர் 1990களில் இதையே செய்தனர்.
இதனிடையே 1997-ல் டயாக் பழங்குடி மக்கள் தமது நிலத்தை அழித்து எண்ணெப்பனை சாகுபடி செய்வதை எதிர்த்துப் போராடியதில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர். 1999ல் ஆத்திரமடைந்த ஒரு கிராமப் பழங்குடியினர் ஒரு மரம் வெட்டு நிறுவனத்தின் 4 ஊழியர்களைக் கொன்றனர்.
தனது 46வது வயதில் புருனோ காணாமல் போகையில் புருனோவின் மனங்கவர்ந்த கன்னிக் காடுகளில் 5% மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட போர்னியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பெனான் பழங்குடி மக்களும், 2,000 மீட்டர் உயரமுடைய பதுலாவி மலையுச்சியும் புருனோ இல்லாமல் வெறுமையாகிக்கிடக்கின்றன.
அவரது தலைக்கு மரம் வெட்டிகள் விலை நிர்ணயம் செய்திருந்ததாகவும், 16 மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனபோது அப்பகுதியில் காவல்துறை மற்றும் மரம் வெட்டிகளின் நடமாட்டம் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புருனோ 1998-ல் ஜெனிவாவில் ஐ.நா.சபை கட்டிடம் மீது பாரசூட்டில் குதித்தார் 1999-ல் மலேசியாவின் சரவாக் மாகாணத் தலைநகர் குசிங் மீது கிளைடர் விமானத்தில் பறந்தார். அப்போது முதல்வருக்கு பரிசாக அளிக்க ஒரு பொம்மை ஆட்டுக்குட்டியை எடுத்துச்சென்றார். ஆனால் கைது செய்யப்பட்டு கோலாலம்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார். தனது சாகசத் திறனை கின்னசில் இடம்பிடிக்கப் பயன்படுத்தாமல் காடுகளையும் கானக மக்களையும் பாதுகாக்கப் பயன்படுத்திய புருனோவின் செயலை மறக்க முடியுமா?
அவரது நண்பரும் சூரிச் விலங்கியல் பூங்கா நிர்வாகியுமான கிராஃப், "சில பழங்குடியினர் தமது நிலத்தை மரம் வெட்டும் நிறுவனங்களுக்கு விற்றுவிட்டனர். சில நெருங்கிய நண்பர்களே பாரம்பரிய உடைகளைத் துறந்து டி-சர்ட், ஷீ என மாறிவிட்டனர். காணும் இடமெங்கும் மரம் வெட்டு நடைபெற்றுவந்தது. புருனோ பாதி குழந்தைமனமும், பாதி கதாநாயகத் தன்மையும் கொண்டவர். அவரால் இவற்றை ஏற்க முடியவில்லை. எனவே தனக்கு விருப்பமான பதுலாவி மலையில் இறந்திருக்கலாம்" என்கிறார்.
பல பழங்குடி நண்பர்களும், ஐரோப்பிய நண்பர்களும், ஹெலிகாப்டரில் தேடியும் எந்தவொரு அடையாளத்தையும் காண முடியவில்லை. அவர் மறைந்துவிட்டார்-எப்படி-ஏன் என்பதுதான் தெரியவில்லை. எனினும் அந்தப் பசுமைப் போராளியின் நினைவு மறையாது.
-அசுரன்
இக்கட்டுரை 2001 டிசம்பரில் எழுதப்பட்டது. கூடுதல் விபரங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

முதல் அணுகுண்டு வீசப்பட்ட 1945 ஆகஸ்ட் 6 காலை 8.15


1945 ஆகஸ்ட் 6 ஆம் நாள் சப்பானின் ஹிரோசிமா நகரில் உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் வீசப்பட்டபோது தப்பிப் பிழைத்த குழந்தைகளின் உணர்வுகளை தொகுத்துள்ளார் பேராசிரியர் அரடா ஒசாடா. அதிலிருந்து சில பகுதிகள்.

கிய்கோ சகச (1945-ல் 6 வயதாயிருந்தவர்)
"அணு குண்டால் ஹிரோசிமா நகரம் முற்றாக அழிக்கப்பட்டபோது, அதிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரு மனிதர் ஓலமிட்டவாறே வந்தார். அதைக் கேட்டதும் எனது பாட்டி ஹிரோசிமாவை நோக்கிச் சென்றார்.
ஒரு வாரத்தின் பின்னர் அவர் திரும்பி வந்தபோது "அம்மா எங்கே?" என்றேன்.
"அவளை எனது முதுகில் தூக்கி வந்திருக்கிறேன்" என்றார் பாட்டி.
நான் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டேன், "அம்மா....."
ஆனால் நான் மிக நெருங்கிச்சென்று பார்த்தபோது பாட்டியின் முதுகில் ஒரு பயணிகள் பை தொங்கிக் கொண்டு இருப்பதைத்தான் பார்க்க முடிந்தது.
நான் ஏமாற்றமடைந்தேன்.
எனது சகோதரியும் எங்கள் அண்டை வீட்டினரும் அழத் தொடங்கினர். ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிறகு பாட்டி அந்தப் பையை கீழே வைத்து, அதில் இருந்து சில எலும்புகளை வெளியே எடுத்து அனைவரிடமும் காட்டினார். அதில் என் தாயாரின் தங்கப் பல்லும், அவரது கை எலும்புகளும் இருந்தன.
அப்போதும் என்னால் எதையும் புரிந்துகொள்ள இயலவில்லை.

கிமிகோ தகாய (1945-ல் 5 வயது சிறுமி)
சில நிமிடங்களில் ஹிரோசிமாவே நாசமாக்கப்பட்ட அந்த 1945 ஆகஸ்டு 6 ஆம் நாளை நினைத்துப்பார்க்கிறேன்.
அன்று நானும் எனது தோழி தாத்சுகோவும் அண்டை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு விமானம் வரும் ஒலியை நான் கேட்டேன்.
"ஏய்...விமானம்" என்றேன். அந்த நொடியில் மின்னலடித்ததுபோல ஒரு ஒளிவெள்ளம் தெரிந்தது. அஞ்சிய நான் அண்டை வீட்டுக்குள் ஓடி அப்பெண்ணை பிடித்துத் தொங்கினேன். ஆனால் அவளோ மிகவும் கிலியடைந்திருந்தாள். என்னை உதறி விட்டு தனது கணவனை அணைத்துக்கொண்டாள். ஒரு நீளத் துணியை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு, தனது கணவனுடன் வீட்டை விட்டு ஒடினாள்.
எனக்கும் எனது தோழிக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. விரைந்து இருள் பரவி, வீட்டின் கூரை உடைந்து விழத் தொடங்கியது. கண்களை அகலத் திறந்தபடி நாங்கள் இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டோம்.
தாத்சுகோவின் தாயார் அச்சத்துடன் கூவி அழைத்தார். பார்த்ததும் தாத்சுகோவை அழைத்துச் சென்றுவிட்டார். நான் தனித்துவிடப்பட்டேன். நான் அழத் தொடங்கினேன். முகம் முழுவதும் புழுதி அப்பிய மற்றொரு அண்டை வீட்டுக்காரி, "அழாதே, உங்க அம்மா இங்கே இருக்கிறாள்" என்று கூறிவிட்டு ஓடினாள் நான் மீண்டும் தனித்து விடப்பட்டேன்.
சிறிது நேரத்தில் "கிமிகோ! கிமிகோ" என்று அழைக்கும் எனது சகோதரியின் குரல் கேட்டது. எனது தாயாரும் வந்துவிட்டார். நாங்கள் நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான இடத்தைத் தேடினோம்.
நாங்கள் நடந்து சென்றபோது வயிறூதிய வீரர்களின் உடல்கள் ஆற்றில் மிதப்பதைக் கண்டோம். அவர்கள் அணுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்தவர்கள். சாலையோரங்களில் பிணங்கள் நிறைந்துகிடந்தன.
மற்றோரிடத்தில், மரத் தடியில் கால் சிக்கியதால் நகரவும் முடியாமலிருந்து ஒரு பெண்ணைக் கண்டோம். வேறு யாரைப்பற்றியும் கவலைப் படாமல் எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர். எனது தந்தை கோபமாகக் கத்தினார் "இங்கே சப்பானியர் யாருமே இல்லையா?". பின்னர் அப்பெண்ணை விடுவித்தார்.
மற்றோரிடத்தில் முழுக்க தீக்காயங்களுடன் ஒரு மனிதன் சாவின் விளிம்பில் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். எனது தாயார் தன்னால் இனிமேல் நடக்க முடியாது என்றும் தன்னை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லுமாறும் கூறிவிட்டு களைத்து கீழே அமர்ந்துவிட்டார். அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை. அருகிலிருந்து கலங்கிய நீரை எடுத்துக்கொடுத்தோம். சிறிது ஓய்வெடுத்தபின் மீண்டும் எங்களுடன் சேர்ந்து நடந்தார்.
நாங்கள் கிராமப்பகுதிகளில் சென்றபோது விவசாயிகள் எங்களைத் திகைப்புடன் பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். நாங்கள் பண்ணை வீடுகளைக் கடந்து சென்றபோது மக்கள் வெளியே வந்து சோற்று உருண்டைகளைத் தந்தனர்.
நாங்கள் எங்கள் உறவினர்களின் வீட்டில் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியிருந்தோம்.
நாங்கள் வந்து சேர்ந்ததும் எனது தாயார் முதுகில் காயம்பட்டு வலிப்பதாகக் கூறினார். நான் பார்த்தபோது முக்கால் இஞ்ச் அகலமும் ஒன்றரை இஞ்ச் நீளமும் உடைய ஒரு கண்ணாடித்துண்டு காயப்படுத்தியிருப்பதைப் பார்த்தேன். எனது தம்பியை தனது முதுகில் தூக்கி நடந்ததால் அது ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது. ஒரு மருத்துவரைச் சென்று பார்த்தோம்.
மறுநாள் தந்தை எனது சகோதரியைத் தேடி சென்றார் எனது சகோதரி பணிபுரிந்த ஹிரோசிமா அஞ்சலகத்திற்கு அருகிலிருந்த அய்யோய் பாலத்தில்தான் அணுகுண்டு வீசப்பட்டிருந்தது. "அம்மா...." என்றோ, "ஐயோ" என்றோ அலறக்கூட நேரம் தராமல் அவள் கொல்லப்பட்டிருப்பாள்.
அங்கு பணிபுரிந்த ஒருவரைத் தவிர பிற அனைவரும் கொல்லப்பட்டிருந்தனர். பிழைத்த அந்த ஒருவர் கொல்லப்பட்டவர்களின் எஞ்சிய சாம்பலை சேகரித்து அவரவர் வீடுகளில் கொடுத்தார்.
எனது சகோதரியின் சாம்பலும் கிடைத்தது.
இதுபோல ஆயிரமாயிரம் சோகக் கதைகள்.
நமது தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்பாக்கம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் அணுஉலை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அணுஉலை என்பது பல அணு குண்டுகளுக்குச் சமம் என்பதை செர்னோபில் விபத்து தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறது.
ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட் டவை சிறிய குண்டுகள் என்பதால் தப்பிப் பிழைத்து சேதி சொல்ல கொஞ்சம் பேராவது உயிருடன் இருந்தார்கள். கல்பாக்கத் திலோ கூடங்குளத்திலோ ஏதாவது ஆனால் நமக்கு என்ன ஆனது? எப்படி ஆனது என்று சொல்லவாவது யாராவது மிஞ்ச முடியுமா?
வருமுன் காப்பதுதானே அறிவுடைமை! அழிவு வந்தபின் ஒப்பாரி வைத்து என்ன பயன்?
-அசுரன்

இக்கட்டுரை 2002 ஆகஸ்‍டில் எழுதப்பட்டது
1945 ஆகஸ்ட் 6 ஆம் நாள் காலை 8.15 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் சப்பான் மீது வீசப்பட்டது. இதில் பல்லாயிரம்பேர் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்தனர், உயிர் பிழைக்கத் தப்பியோடினர். சில நிமிடங்களில் ஹிரோசிமா நகரமே அழிந்துபோனது. இறந்தவர்களின் சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 9 ஆம் நாள் சப்பானின் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதிலும் எண்ணற்ற இழப்புகள். ஏதாவது எஞ்சியிருக்குமா என்று மீட்புப்பணியாளர் ஒருவர் ஹிரோசிமாவில் பார்வையிடும் காட்சி இது.